சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) வந்ததாகத் தோன்றும் அந்தச் செய்திகள், போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்கான அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன.
இருப்பினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அத்தகைய அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை என்றும், அந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீர பொது மக்களை வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அந்த இணைப்புகளைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை வழங்கவோ அல்லது அந்தச் செய்திகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.












