சமூக ஊடகங்களில் பரவி வரும், தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கார் ஒன்றின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காட்சி அடங்கிய காணொளி குறித்து, பொலிஸ் ஊடகப் பிரிவு சிறப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அந்தச் சிறுவனே வாகனத்திற்குத் தீ வைத்ததாகக் கூறும் ஒலிப்பதிவு ஒன்றுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வந்தாலும், அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான நேரடி சாட்சியங்களோ அல்லது தடயவியல் ரீதியான ஆதாரங்களோ இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
குருணாகல் நகரில் உள்ள ஒரு பாடசாலையின் வளாகத்தில், 2026 ஜூலை 3 அன்று சுமார் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும், இச்சம்பவத்திற்குக் சுமார் ஏழு வயதுடைய சிறுவன் ஒருவன் காரணமென்றும் கூறி குருணாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் பொலிஸார் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அந்தச் சமயத்தில் காரின் அருகே சென்றுகொண்டிருந்த சிறுவன், அதே பாடசாலையில் பயிலும் சுமார் எட்டு வயதுடைய மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், காணொளியில் காணப்படும் சிறுவன் காரில் தீ வைத்ததைக் குறிக்கும் வகையிலான நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
குருணாகல் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
அதேவேளையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர் சான்றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரச பகுப்பாய்வாளர் திணைக்களமும் மேற்கொண்டுள்ளது.
எனவே, அதிகாரப்பூர்வ விசாரணை நிறைவடையும் வரை, சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் பொய்யான கூற்றுகளால் ஏமாற்றமடைய வேண்டாம் – என்று கூறப்பட்டுள்ளது.












