லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடும் ஜாஃப்னா கிங்ஸ் (Jaffna Kings ) அணியின் உரிமையாளர்களில் ஒருவரை, ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டின் பேரில், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2026 இலங்கை பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொடக்க விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜாஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், விளையாட்டுத் துறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு ஊழலுக்கு எதிராக உலகிலேயே கடுமையான சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் “விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டம்” இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் போட்டி ஆட்ட நிர்ணய சதி (Match-fixing), குறிப்பிட்ட நிகழ்வுகளை திட்டமிட்டு மாற்றுதல் (Spot-fixing) உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மோசடிகள் குற்றமாகக் கருதப்படுகின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகளவிலான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.












