இலங்கையின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான யுபுன் அபேகோன் (Yupun Abeykoon), தனது விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த திடீர் முடிவை அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்த உணர்ச்சிபூர்வமான அறிக்கை ஒன்றில், தனது விளையாட்டுப் பயணம் முழுவதும் தனக்கு ஆதரவளித்த குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்கள், இலங்கை இராணுவம், இலங்கை தடகளச் சங்கம், தனது இத்தாலியப் பயிற்சிக்குழுக் குழுவினர், அனுசரணையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான இலங்கை மக்கள் ஆகியோருக்கு யுபுன் அபேகோன் நன்றி தெரிவித்தார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது தனது வாழ்வின் ஆகச்சிறந்த கௌரவம் என்று கூறிய அவர், அதேவேளையில் தொடர்ந்து போட்டியிடும் திறன் இருந்தும் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டதைக் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
தனது பயணத்தின் அடுத்த கட்டத்தில், தனது முடிவிற்கான காரணங்களை வெளிப்படுத்தவும், இலங்கை தடகள விளையாட்டின் தற்போதைய நிலை குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் போவதாக யுபுன் அபேகோன் கூறினார்.















