பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடமிட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் மீண்டும் மீண்டும் பதிவாகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பாக பொலிஸாரால் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொதுமக்களை தெளிவுப்படுத்த பொலிசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், பொதுமக்கள் தொடர்ந்தும் இத்தகைய மோசடி நபர்களின் வலையில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தியும், போலி வேடமிட்டு பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கணினிகள் அல்லது கைப்பேசிகளைப் பயன்படுத்தி, இணைய வழியில் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களுடன் போலியாக உருவாக்கப்பட்ட WhatsApp, Telegram உள்ளிட்ட கணக்குகளைப் பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் தற்போது அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான மோசடி நபர்கள் அல்லது குழுக்களின் வலையில் சிக்காமல் இருக்குமாறு பொதுமக்களை மீண்டும் மீண்டும் எச்சரிப்பதுடன், பின்வரும் விடயங்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் அலுவலக நிலையான தொலைபேசி அல்லது கைப்பேசிக்கு அழைத்து, தங்களை இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலங்கை பொலிஸின் விசாரணைப் பிரிவு என அறிமுகப்படுத்திக் கொள்வது.
“உங்கள் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது”, “உங்களுக்குத் தெரியாத பகுதியில் வங்கி அட்டையைப் பெற்று பணம் செலுத்தப்படவில்லை”, “உங்கள் வங்கிக் கணக்கு பணம் தூயதாக்கலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது; உங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்” போன்ற அச்சுறுத்தல்களுடன் அழைப்புகளை மேற்கொள்ளுதல்.
“இது இரகசிய விசாரணை” எனக் கூறி பயத்தை ஏற்படுத்துவதுடன், பின்னர் “உங்களுக்கு உதவுகிறோம்” என்று கூறி WhatsApp அல்லது பிற சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தி, போலியான அரச இலச்சினைகள், ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் புகைப்படங்களை அனுப்புவது.
“முறைப்பாட்டை தீர்த்து வைப்பதற்கு”, “Verification செய்ய”, “Freeze செய்யப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் செயல்படுத்த” என்று கூறி OTP இலக்கங்களை பெற்றுக்கொண்டு, பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றச் செய்வது அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்களை வாங்கி அனுப்புமாறு வற்புறுத்துவது.
அதற்கமைய, உங்களது தனிப்பட்ட மற்றும் நிதிச் தகவல்களின் பாதுகாப்புத் தொடர்பாக பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்:
எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் ஊடாகவோ, WhatsApp அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ உங்களது தேசிய அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை எண்கள் (Card Numbers), CVV எண், கடவுச்சொற்கள் (Passwords) அல்லது OTP எண்களைக் கேட்கப்படமாட்டது. இவ்வாறான தகவல்களைக் கோரும் அனைத்து அழைப்புகளும் செய்திகளும் மோசடியானவை எனக் கருதுங்கள்.
“உங்கள் கணக்கு ஆபத்தில் உள்ளது”, “அட்டை முடக்கப்பட்டுள்ளது”, “வழக்குத் தொடரப்போகிறோம்” எனக் கூறி பயமுறுத்தி பணத்தை மாற்றுமாறு கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு ஏமாற வேண்டாம். உங்களுக்குத் தெரியாத ஒரு கணக்கிற்கோ அல்லது நபருக்கோ பணத்தை மாற்றுவதற்கு முன்னர், உங்களது வங்கியின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இலங்கை பொலிஸ், குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) அல்லது இலங்கை மத்திய வங்கி ஆகியன ஒருபோதும் தனிப்பட்ட WhatsApp எண்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதில்லை என்பதுடன், வங்கிக் கணக்கு எண்களை வழங்கி பணத்தை வைப்பு செய்யுமாறு கோருவதும் இல்லை. உத்தியோகபூர்வ அறிவித்தல்களுக்கு எழுத்துமூலக் கடிதம் அனுப்பப்படுவதுடன், தேவைப்படும் இடங்களில் சீருடை அணிந்த உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள்.
அரச நிறுவனங்களின் இலச்சினைகள், உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் கையொப்பங்களைப் பயன்படுத்தி WhatsApp அல்லது பிற சமூக வலைத்தளங்கள் ஊடாக அனுப்பப்படும் ஆவணங்கள் பெரும்பாலும் போலியானவையாகும். இவ்வாறான செய்தி கிடைத்தவுடன், உடனடியாக உங்கள் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு உண்மையைத் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
அறிமுகமில்லாத நபர்கள் மற்றும் சமூக வலைத்தளக் குழுக்களால் (Groups) பகிரப்படும் இணையதள இணைப்புகள் (Links) மற்றும் ஸ்கேன் குறியீடுகளைப் (QR Codes) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
முக்கிய அறிவிப்பு
இலங்கை பொலிஸார் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடுவதில்லை.
இவ்வாறான மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பான தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்கலாம்.
கணினி குற்ற விசாரணைப் பிரிவு – மேற்பார்வை அதிகாரிகள் – 071 8592918
071 8591765
கணினி குற்ற விசாரணைப் பிரிவு – 011 2300756
மேலும், பொதுமக்கள் நேரடியாக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு சென்று எழுத்து மூலமாகவும் முறைப்பாடு செய்யலாம் – என்று குறிப்பிட்டுள்ளனர்.















