சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (ஜூலை 28) முதல் 30-ம் திகதி வரை நடக்கும் இப்பட விழாவை இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் நடத்துகிறது.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சேஸ் அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளான இன்று 6 மணிக்கு யுகிஹிகோ சுட்சுமி இயக்கிய ‘த ஹோட்டல் ஆஃப் மை ட்ரீம்’ படமும் நாளை மாலை 6 மணிக்கு யுகிகோ சோடே இயக்கிய ‘அரிஸ்டோகிராட்ஸ்’ திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.ஜூலை 30-ல், 2 படங்கள் திரையிடப்படுகின்றன. அன்று மாலை 5 மணிக்கு ஹிரோயுகி நகாவோ இயக்கிய ‘டைம் ஸ்கூப் ஹன்டர்’ 7 மணிக்கு டோகுஹிரோ கொய்சுமி இயக்கிய ‘த லைன்ஸ் டிரா மீ’ ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன. திரைப்பட விழாவில் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
உறுப்பினர் அடையாள அட்டை அல்லது அழைப்பிதழ் கட்டாயம். உலக சினிமாவை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஜப்பானியத் திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

















