மண்டைதீவு படுகொ*லை மற்றும் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து, வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினா முன்னிலையானார். அவருடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், பிராந்திய இணைப்பாளர் த. செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோரும் நீதிமன்றில் ஆஜராகினர்.
முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான விசாரணை, வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணை நடைபெற்றபோது, அடையாளம் காணப்பட்ட இடத்திற்கு போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குறித்த காணியின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வ அறிக்கை பெற வேண்டும் என்றும் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கிராம சேவகர், பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தலைவர், சட்ட விசாரணை அதிகாரி, பொலிஸார் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் இணைந்து கலந்துரையாடல் நடத்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. சட்ட விசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னர், அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான நிதியை சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் திகதி, தனது மகனை இழந்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த வழக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 செப்டம்பர் 17ஆம் திகதி முதல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.













