நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் வழமைபோன்று தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, காலநிலை காரணமாக வீடுகளுக்குத் திரும்ப முடியாத மாணவர்கள், சரஸவி மதுர விடுதியைத் தவிர்ந்த பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கலாம் என்றும், அதற்காக விடுதி நிர்வாகத்தினருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் தங்கியுள்ள மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளில் தங்க விரும்பினால், அவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதற்கான பதிவுகள் பராமரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு மாணவரும் கட்டாயமாக விடுதிகளை விட்டு வெளியேற வேண்டியதில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
காலநிலை வழமை நிலைக்கு திரும்பும் வரை பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும், மாணவர்களின் பாதுகாப்பே தங்களது முதன்மை கவனமாக இருப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.













