இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, மறைந்த கம்பம் ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிட்வா புயல் அனர்த்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார். அந்த உதவிகளை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இதனையடுத்து, பெருந்தோட்ட மக்களுக்கான OCI (Overseas Citizen of India) அட்டை வழங்கலில் விசேட சலுகைகள் வழங்க வேண்டும் எனவும், கட்டண சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்கள் தனியார் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில், ஆயுஷ்மான் பாரத் காப்புறுதி திட்டத்தின் பயன்களை லங்கா LIC ஊடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.













