பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா பிரசங்கா என்ற பேக்கோ சமனின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரண்டேனியே சுத்தா குடும்பத்தினர், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தோனேசியாவில் கெஹல்பத்ர பத்மேவுடன் பேக்கோ சமந் கைது செய்யப்பட்ட பின்னர் , அவரும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் கொலைக்காகவும் பேக்கோ சமன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள், மாத்தறையின் பொல்வத்த, தம்பஹால பகுதியில் இன்று காலை (13)ஊருபொக்க பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று (12) மாலை சுமார் 6 மணியளவில், உலஹித்தியாவ, மித்தெனியவின் படலங்கல கெதர பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூடு சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
9 மி.மீ. ரக துப்பாக்கியைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்பில் துப்பாக்கிதாரிகள் சுமார் 7 முறை சுட்டுள்ளனர்.
பின்னர் துப்பாக்கிதாரிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அப்பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.







