“தூய்மையான இலங்கை” ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், செயலணியின் உறுப்பினர்களுடனான சிறப்புக் கலந்தரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் “தூய்மையான இலங்கை” திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, நாட்டின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், இதற்கெனச் செயலணிக்குள் பிரத்யேகத் திட்ட மேலாண்மைப் பிரிவு (Project Management Unit) ஒன்றை நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், கொழும்பு பெருநகரப் பகுதியில் கழிவு மேலாண்மை, நகரங்களை அழகுபடுத்துதல், கால்வாய்களைச் சுத்திகரித்தல், கழிவுநீர்க் கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் பூங்காக்களை முறையான முறையில் புனரமைத்துச் சில நகரங்களை முன்மாதிரி நகரங்களாக மாற்றுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், வரும் ஆண்டில் இத்திட்டத்தின் முக்கிய தூண்களான சமூக மற்றும் நெறிமுறை சார்ந்த அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பாடுகளைத் திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கலந்தரையாடலில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சோ, மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







