யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நேற்று (15) நயினாதீவு அருகே விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்த உடனேயே, இலங்கை கடற்படையினரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறு நான் அறிவுறுத்தினேன்.
இதனையடுத்து, இலங்கை கடற்படையினர் மற்றும் நயினாதீவு, நெடுந்தீவு மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட துரித மீட்பு நடவடிக்கையின் மூலம், படகில் பயணித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் படகு விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.














