இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் நேற்யை (24) தினம் இந்தியா 503-9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.
பின்னர், பந்து வீச்சிலும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணியை 8-2 என்ற நிலையில் தடுமாறச் செய்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்ட 115 ஓட்டங்கள் இந்திய அணிக்கு உயரியதாக அமைந்தது.
அவரது இரண்டாவது டெஸ்ட் சதம், இப்போட்டியில் இந்தியா தனது பிடியை வலுப்படுத்த உதவியது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தின் போது, ’தேர்ட் ஸ்லிப்’ (third slip) நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த அபாரமான பிடியெடுப்பு மூலம் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதார ஒரு ஓட்டத்துடன், ஆட்டமிழந்தார்.
அதையடுத்து பிரபாத் ஜயசூரிய ‘நைட்வாட்ச்மேன்’ (nightwatchman) ஆகக் களமிறக்கப்பட்டார்; ஆனால், அவர் ஏழு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தார்.
மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால், அதுவே அந்த நாளின் கடைசிப் பந்தாகவும் அமைந்தது.
இதனால் இரண்டு விக்கெட் இழப்புக்கு எட்டு ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி 495 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஜுரெல் தனது திறமையை வெளிப்படுத்திய இந்நாளில், மழையின் காரணமாக 56 ஓவர்கள் மட்டுமே பறிமாறப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்யத் தீர்மானித்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களை எடுத்திருந்தது.
தேவ்தத் படிக்கல் தொடரில் இரண்டாவது சதத்தை அடிக்க இரு அணிகளுக்கும் இடையே ஆட்டம் சமநிலையில் இருந்தது.
எனினும், ஜுரெல் மற்றும் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் (63) ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்கள் சேர்த்து இந்திய அணியை வலுவான நிலைக்கு உயர்த்தினர்.
ஆட்டத்தின் முதல் நாளன்று முன்கையில் அடிபட்டதால் பாதியிலேயே வெளியேற நேரிட்ட பண்ட், திங்கள்கிழமை மீண்டும் தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
உடல் பகுதியில் பலத்த அடிகளை வாங்கினாலும் அவர் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடினார்.
அவரது விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆறு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் இடம்பெற்றிருந்தன.
அவற்றில் ஒரு சிக்ஸர் அருகிலிருந்த டென்னிஸ் மைதானத்திற்குள் சென்று மறைந்ததால், மாற்றுப் பந்தை எடுக்குமாறு நடுவர்கள் கோரும் நிலை ஏற்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் வீசப்பட்ட முதல் பந்திலேயே, ‘லாங்-ஆஃப்’ (long-off) திசையில் பந்தை எல்லைக்கோட்டிற்கு அப்பால் அனுப்பத் தவறியதால் பண்ட் ஆட்டமிழந்தார்.
ஜூரல் 99 ஓட்டங்கள் இருந்தபோது சில பதற்றமான தருணங்களைச் சந்தித்த பின்னர், மிட்-ஆஃப் திசையில் ஒரு விரைவான சிங்கிள் அடித்து அந்த மைல்கல்லை எட்டினார்.
இறுதியாக கடைசி ஆட்டக்காரரான பிரசித் கிருஷ்ணா, அஷித பெர்னாண்டோ வீசிய ஃபுல் டாஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்து இந்தியாவை 500 ஓட்டங்கள் கடக்கச் செய்தார், இது ஆட்டத்தை டிக்ளேர் செய்யத் தூண்டியது.
ஜூரல் 177 பந்துகளை எதிர்கொண்டு, ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இலங்கை பந்துவீச்சாளர்களில் அஷித பெர்னாண்டோ சிறப்பாகச் செயல்பட்டு, 106 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்கையில் ஏற்பட்ட காயத்தின் வலியால் பண்ட் விக்கெட் காப்பு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், இலங்கை அணி தனது பதிலடி ஆட்டத்தைத் தொடங்கியபோது ஜூரல் விக்கெட் காப்பாளராக பொறுப்பை ஏற்றார்.
முதல் நாளில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அஷித பெர்னாண்டோ மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அவர்களின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் நிலைக்குச் சென்ற நிலையில், சக வீரர்கள் தலையிட்டு அவர்களைத் தடுத்தனர்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.













