தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாகக் கூறி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் குழப்பமான முறையில் நடந்துகொள்ளும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இச் சம்பவமானது அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது என்பது தெரியவந்துள்ளது.
காணொளியில் தந்தை எனக் குறிப்பிடப்படும் வயோதிப நபர், 2026.08.24 அன்று இரவு மதுபோதையில் அநாகரிகமான முறையில் வீதியில் சுற்றித்திரிந்தமை காரணமாக, அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் அச்சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் தப்பியோட முயற்சித்துள்ளதுடன், ஓட முடியாமல் கீழே விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட இரத்தக்கசிவின் அடையாளங்கள் காணொளியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த சந்தேகநபரை 2026.08.25 அன்று பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், பலபிட்டிய கௌரவ மேலதிக நீதவான் அவர்களால் குறித்த சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், காலி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், அம்பலாங்கொட பொலிஸ் நிலையம் அமைந்துள்ள அல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.













