கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இன்று (26) இலங்கை அணியை 290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்தியா, எதிர் அணியைப் ‘ஃபோலோ-வன்’ (follow-on) செய்யுமாறு பணித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியல் வெற்றி பெற்று முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்திருந்தது.
இந்திய அணி சார்பில் தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜுரல் 115 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்திருந்தனர்.
பின்னர், பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்களை எடுத்திருந்தது.
கடந்த வாரம் காலியில் நடைபெற்ற போட்டியில் 100 மற்றும் 84 ஓட்டங்களைக் குவித்த சோனல் தினுஷ ஆட்டத்தின் முடிவில் 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த நிலையயில் இன்றைய ஆட்டத்தை 8 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்களுடன் தொடங்கிய இலங்கைக்கு, ‘ஃபோலோ-வன்’ (follow-on) செய்வதைத் தவிர்க்க மேலும் 39 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டன.
தொடர்ந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த தினுஷ, சாராங்ஷ் ஜெயினின் பந்துவீச்சைத் துணிச்சலாக எதிர்கொண்டு சில பவுண்டரிகளை அடித்து சதம் விளாசி 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 213 ஓட்டங்களினால் பின்தங்கியது.
தற்சமயம் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.














