தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பில் நேற்று (25) கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மாகாண சபைத் தேர்தலுக்குத் தேவையான சட்டங்களை ஆய்வு செய்து தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு தனது பணிகளை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என்றும், தேர்தலைக் கூடிய விரைவில் நடத்த அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹாச்சி மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், தேர்தலை அரசு தாமதப்படுத்தவில்லை என்றும், அவரது கருத்து திரித்துக் கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த செயல்முறை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எல்லை நிர்ணய (Delimitation) செயல்முறை தொடர்பில் அரசியல் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும், தேர்தலை நடத்துவதற்கு முன் அவை தொடர்பான அனைத்து கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.













