நேபாளத்தின் வடக்குப்பகுதியில், திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ள நீர் கீழ்நோக்கிப் பாய்ந்து வருவதால், அண்டை மாநிலமான பீகாரிலும் இதுதொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திபெத் பகுதியிலிருந்து காலை 9 மணியளவில் திடீரெனப் பாய்ந்து வந்த வெள்ளப்பெருக்கு ‘போட்டே கோஷி’ (Bhote Koshi) ஆற்றில் கலந்ததால், டிமுரே (Timure) மற்றும் சியாப்ரு பெசி (Syapru Besi) ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேதத்தின் முழு விவரங்களும் இன்னும் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
















