நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வருகின்ற அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்ட அஸ்வெசும நிதி 250மில்லியன் ரூபாவினை தாண்டியுள்ள நிலையில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் அஸ்வெசும தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ கிலானி தோட்ட பகுதியில் 71வயதுடைய நாராயணசாமி இராமையா என்பவருடைய அஸ்வெசும கொடுப்பணவு நிதியில் மோசடி இடம் பெற்றதாக இந்த முதியவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2023ம் ஆண்டு காலப்பகுதியில் தனது வங்கி கணக்கில் 7500ரூபாய் படி இரண்டு மாதங்களுக்கான கொடுப்பணவு மாத்திரம் கிடைதாததாகவும் அதற்கு பிறகு அந்த கொடுப்பணவு தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்
இது தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு சென்று ஏன் எனது வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என கோரிய போது அது வரும் மென கூறி சமாளித்து அதிகாரிகள் இந்த முதியவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும மோசடிக்கு பின்னர் நாராயனசாமி இராமையாவின் அஸ்வெசும கொடுப்பணவு பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டம் பகுதியில் வசிக்கின்ற நாராயனசாமி என்பவரின் வங்கி கணக்கிற்கு இந்த பணம் இதுவரை காலமும் வைப்பிலிடப்பட்டு வந்தமை நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வு அதிகாரிகளின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து அஸ்வெசும நிதி மோசடியில் ஈடுபட்ட அதிகாரியின் மாமனார் எனவும் தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஷாநாயக்க அவர்கள் தலையிட்டு மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.















