இலங்கையில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் இன்னமும் டெங்கு நோய்த்தாக்கத்தின் அதிஅபாய வலயங்களாகவே காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தற்போதைய டெங்கு நோயாளர் நிலைவரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதன்படி, நடப்பு 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாகாண மட்டத்தில் மேல் மாகாணத்திலேயே அதிகளவாக 50,358 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தெற்கு மாகாணத்தில் 13,854 பேரும், மத்திய மாகாணத்தில் 8,659 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அடிப்படையில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 20,276 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொற்றினால் 72 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.














