கொழும்பு – 08 மெகசின் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா2026 ஆகஸ்ட் 29 ஆம் திகதி மிகக் கோலாகலமாகவும் பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.
கடந்த 2026 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இம்மாபெரும் உற்சவத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அதுல தஸ்ஸன பௌத்த மத்திய நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பால்குடப் பவனி தேவஸ்தானத்தைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27 ஆம் திகதி 108 சங்காபிஷேக பூஜைகளும் வெகு விமரிசையாக நடைபெற்றன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ விநாயகன் சர்மா தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இத்திருவிழாவில் இந்து – பௌத்த விழுமியங்களோடு தமிழ் – சிங்கள கலாச்சார இணைப்பில் பிரமாண்டமான தேர் மற்றும் பெரஹரா ஊர்வலமாக நடைபெற்றமை முக்கிய சிறப்பம்சமாகும்.
இவ்வூர்வலத்தில் அம்பாளின் தேரோடு புனித யானைகள் பௌத்த புனித சின்னங்களை ஏந்தியவாறு பவனி வர பறவைக்காவடி, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் குதிரையாட்டம் மற்றும் சிங்கள பெர மேள வாத்தியங்களுடன் கூடிய கண்கவர் நடன நிகழ்வுகளுடன் ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தேவஸ்தானத்தில் ஆரம்பமான அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி பொரள்ளை சந்தியூடாகக் கொட்டா வீதி, லெஸ்லி ரணகல மாவத்தை ஆகிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் பொரள்ளை சந்தியூடாக தேவஸ்தானத்தைச் சென்றடைந்தது. இத் திருவிழாவில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.













