நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நீர்மின் திட்டப்பணிகள் ஆழமான சேற்றில் புதையுண்டு அதனுள் சிக்கிக்கொண்ட நிலையில், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள ‘திரிசூலி 3A’ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில், தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கையின்போது தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பாஸ்நெட் தெரிவித்தார்.
சஞ்சய் ஷா முதலில் மீட்கப்பட்டு, திரிசூலியில் உள்ள நேபாள ராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, கபீர் மஹர்ஜன் என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்டார்.
சுரங்கப்பாதைக்குள் 170 மீட்டர் ஆழத்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்டதாக பாஸ்நெட் உறுதிப்படுத்தினார்.
நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமையின் தகவலின்படி, வெள்ளத்தில் பேரிடரில் 1,259 பேர் உயிரிழந்துள்ளனர்; 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
நீர்மின் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள காற்று இடைவெளிகள் (air pockets) காரணமாக, தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக உயிருடன் இருந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதுவரை, பல்வேறு திட்டப்பகுதிகளில் இருந்து 270-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.














