கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இரு நபர்களினால் இந்த வன்முறைச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், யக்கலமுல்ல (Yakkalamulla) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகெட்டிய (Moraketiya) பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, யக்கலமுல்ல பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
முந்தைய தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாலேயே இக்கொலை இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













