நீதிமன்ற நடவடிக்கைகளின்போது முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவருமான விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஆணையர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்தபோது, கொழும்பு – தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து நடத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டு போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு வழக்கில், வீரவன்ச சந்தேகநபர் ஒருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவர் நேரில் முன்னிலையாகாதமையினால் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம பிடியாணை உத்தரவினைப் பிறப்பித்தார்.
இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பின்னர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
விமல் வீரவன்சவின் வாகனம் பழுதடைந்ததால் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே அவரால் குறித்த நேரத்தில் வந்து சேர முடியவில்லை என்று அவரது சட்டத்தரணி மஞ்சுளா பத்திராஜா விளக்கினார்.
இதனால், பிடியாணை உத்தரவினை இரத்து செய்யுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
அத்தகைய கோரிக்கையை நாளை ஒரு முறைசார் தீர்மானத்தின் மூலமே முன்வைக்க வேண்டும் என்று தலைமை நீதிவான் போதரகம குறிப்பிட்டார்.
இதனால், அதுவரை அந்த பிடியாணை உத்தரவு நடைமுறையில் இருக்கும்.













