செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்ட வில் ஜாக்ஸ், இங்கிலாந்து அணி இலங்கையை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த உதவினார்.
அணித் தலைவர் ஹாரி ப்ரூக் 67 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது ஆட்ட வேகத்தை இழந்த நிலையில், வில் ஜாக்ஸ் ஆட்டமிழக்காமல் எடுத்த அதிரடி 46 ஓட்டங்கள் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியை 265 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கினை எட்ட உதவின.
பந்து வீச்சிலும் பின்னர், வலது கை சுழற்பந்து வீச்சாளர் வில் ஜாக்ஸ் ஏழு ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திச் சிறப்பாகச் செயல்பட்டார்.
இதில் ஆட்டத்தின் கடைசி ஓவராக மாறிய ஓவரில் அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளும் அடங்கும்.
இதனால் 37 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்ட இலங்கை அணி 176 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலாகே 45 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 42 ஓட்டங்களையும் அதிகளவாக எடுத்தனர்.
இலங்கைக்கு எதிரான முந்தைய டி:20 தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.
போட்டியில் வில் ஜாக்ஸ் பதிவு செய்த இந்தச் சிறப்பான பந்துவீச்சு (அவரது முதல் ஐந்து விக்கெட் சாதனை), ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சிறந்த செயல்பாடாகும்.
1984-ல் வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக விக் மார்க்ஸ் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதைவிடச் சிறந்த சாதனையாக உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டம் நாளை (24) லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் நடைபெறவுள்ளது.













