கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வடக்கு கடற்படை கட்டளைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
2026 செப்டம்பர் 21ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு சென்ற கடற்படை தளபதியை, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன வரவேற்றுள்ளார்.
இதன்போது, வடக்கு கடற்படை கட்டளையின் பாதுகாப்பு நிலைமை, செயல்பாட்டு தயார்நிலை, நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் கடற்படை தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பில் கடற்படையின் பங்கு தொடர்பான தனது முன்னுரிமைகளை வலியுறுத்திய கடற்படை தளபதி, செயல்பாட்டு தயார்நிலை மற்றும் திறன்களை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தானியக்கமயமாக்கலைப் பயன்படுத்துதல், திறமையான நிர்வாகம் மற்றும் காலத்திற்கேற்ற தீர்மானங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடற்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வதுடன், உள்நாட்டு மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அரச நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் கடற்படையின் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு கடற்படை கட்டளையின் செயல்பாட்டு அறையை பார்வையிட்ட கடற்படை தளபதி, அக்கட்டளைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் படகுகளின் செயல்பாட்டு தயார்நிலையையும் பார்வையிட்டுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமணமான அதிகாரிகளுக்கான வீடமைப்புத் தொகுதியையும் அவர் திறந்து வைத்துள்ளார். அதிகாரிகள், சிரேஷ்ட கடற்படையினர் மற்றும் பெண் கடற்படையினருக்கான தங்குமிட வசதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பருத்தித்துறை கடற்படைப் பிரிவுகளுக்கும் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட கடற்படை தளபதி, வடக்கு கடற்படை கட்டளையின் செயல்பாடுகளை மேலும் திறமையாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.













