பொலன்னறுவையில் உள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், சுகாதார அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸாவும் நிலைமையை ஆய்வு செய்வதற்காக குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத், இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
சேதத்தைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், வெடிப்பில் வைத்தியசாலையில் இருந்த நோயாளிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இன்று (26) அதிகாலை சுமார் 4:00 மணியளவில் வைத்தியசாலையின் சமையலறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்; அவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மைச் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவைத் தொடர்ந்து, எரிவாயு உருளை வெடித்ததன் காரணமாகவே இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியும் வகையில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வெடிப்புச் சம்பவம் அருகிலிருந்த பல கட்டிடங்களின் கட்டமைப்பிற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் வைத்தியசாலையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டாலும், வைத்தியசாலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அத்தியாவசியச் சேவைகளைத் தொடர்ந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை பொலன்னறுவை பொது வைத்திசாலைக்கு மாற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
















