பாணந்துறை, வலானா பகுதியில் உள்ள மஹனாம வீதி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழுவொன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (29) இரவு சுமார் 10:00 மணியளவில், அந்த தொழிலதிபர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழுவினர் மற்றொரு வாகனத்தில் வந்து அவரைத் தாக்கி, காரின் கண்ணாடிகளை உடைத்து, அவரது வீட்டிற்கு அருகிலேயே அவரைக் கடத்திச் சென்றதாக பாணந்துறை தெற்குப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் அந்த தொழிலதிபரின் இரு மகள்களும் காயமின்றித் தப்பினர்.
அதேவேளையில், அவரது மனைவி காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அந்த தொழிலதிபரைக் கடத்த முயன்றபோது, அவர் காரை நிறுத்தாமல் ஓட்டியதால் அது சாலையோரக் கால்வாயில் பாய்ந்து விழுந்தது.
அதன்பின்னர், கடத்தலை மேற்கொள்ள வந்த கும்பல் அந்த தொழிலதிபரின் காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, அவரை வெளியே இழுத்து வந்து தாக்கி, தாங்கள் வந்த வாகனத்திலேயே அவரை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றது.
அந்த வர்த்தகரின் உறவினர் ஒருவரே இந்த ஆட்கடத்தலை மேற்கொண்டார் என்பதற்கான தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான சிறப்பு விசாரணையை பாணந்துறை தெற்குப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அந்த தொழிலதிபரின் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













