அண்டை நாடான ஈராக்கில் உள்ள தங்களது எஞ்சிய தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகள் புதன்கிழமை (30) அன்று வெளியேறவிருந்த நிலையில், காங்கிரஸில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பங்காளிகளை வாக்களித்து வெளியேற்றுமாறு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அமெரிக்கர்களை வலியுறுத்தியது.
இந்த வெளியேற்றத்தை தெஹ்ரான் கொண்டாடியது.
இதற்கிடையில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏழு மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கட்டார் தனது தூதுவர் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தது.
அதேநேரம், ஈரான் விரைவில் சரணடையும் என்று ட்ரம்ப் மீண்டும் கணித்தார்.
செவ்வாய்க்கிழமை (29) வெளியிடப்பட்ட, பாதுகாப்புப் படையினரின் 26 பக்கக் கடிதம், தற்போதைய தலைவர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கும், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவையும் வெளிநாடுகளில் இராணுவத் தலையீட்டையும் நிராகரிப்பதற்கும் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு அமெரிக்கர்களை வலியுறுத்துகிறது.
ஈரானிய ஊடகங்களில் வெளியான அந்தச் செய்தியை அமெரிக்க வாக்காளர்கள் பார்க்காமலே போகலாம் என்பதால், அது அவர்களின் மனநிலையை மாற்றக்கூடும் என்று கருதப்படவில்லை.
இருப்பினும், நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிராகச் செயல்படும் சில முக்கிய விவகாரங்களை அது சுட்டிக்காட்டுகிறது.
இத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் ஒன்று அல்லது இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் மீண்டும் கைப்பற்றக்கூடும்.
அவ்வாறு நிகழ்ந்தால், அது ட்ரம்பின் அரசியல் திட்டங்களை முடக்கக்கூடும்.
புதிய போர்களைத் தவிர்ப்பது, தற்போதைய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பது ஆகிய வாக்குறுதிகளுடன் ட்ரம்ப் 2024-ல் பிரச்சாரம் செய்தார்;
ஆனால், இஸ்ரேலுடன் இணைந்து அவர் தொடங்கிய ஈரான் உடனான போர், உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வதற்கும் மத்திய கிழக்கில் போர் பரவுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
2016-இல் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பை ஒரு பெரும் தவறு என்று கூறி குடியரசுக் கட்சியின் மரபுசார் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செயல்பட்ட ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் 2024-இல் ஒப்புக்கொள்ளப்பட்ட ஈராக்கிலிருந்து படைகளை முழுமையாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை புதன்கிழமையன்று செயல்படுத்த அனுமதித்தார்.
அமெரிக்கத் தலைமையிலான படைகள் சதாம் உசேனின் ஆட்சியை வீழ்த்தி, அதன் விளைவாக ஏற்பட்ட கொந்தளிப்பான சூழல் ‘இஸ்லாமிய அரசு’ (Islamic State) அமைப்பின் எழுச்சிக்கு வழிவகுத்த நிகழ்வுகள் நடந்து 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் படைகள் திரும்பப் பெறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.














