ராவல்பிண்டியில் நேற்றிரவு (09) நடைபெற்ற முதல் டி:20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் புதிய தலைவரான சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக அரைசதம் அடித்து, இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.
கடந்த மாதம் தலைவராக நியமிக்கப்பட்ட ஃபர்ஹான், 53 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 89 ஓட்டங்களைக் குவித்து, 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 18.5 ஓவர்களில் எட்ட பாகிஸ்தானுக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி, தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதார 55 பந்துகளில் 91 ஓட்டங்கள் அடித்து 182-8 என்ற ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.
இலங்கையின் பந்துவீச்சு, எதிரணியின் ஓட்டக் குவிப்பைத் தடுக்கத் தவறிய நிலையில், ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஜமான் ஆகியோர் ஐந்து ஓவர்களில் 54-0 என்ற அதிரடியான தொடக்கத்தை பாகிஸ்தானுக்கு அளித்தனர்.
இதில் ஜமான் 13 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார்.
மாஸ் சதாக்கத், தனது அதிரடியான 50 ஓட்டங்களில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளை அடித்து, அணியின் வேகத்தைத் தக்கவைத்து, தனது அணித் தலைவருடன் இணைந்து 92 ஓட்டங்கள் சேர்த்து பாகிஸ்தானை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஹசாஸ் நவாஸ் மற்றும் சாய்ம் அயூப் ஆகியோரை சொற்ப ஓட்டங்களில் இழந்தது.
பின்னர் ஃபர்ஹான் இக்கட்டான நேரத்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும், இது அவர்களின் வெற்றி இலக்கைத் தடுக்கவில்லை.
இறுதியாக பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழந்த நிலையில் 187 ஓட்டங்களை எடுத்து, வெற்றியிலக்கினை கடந்தது.
முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இலங்கை வீரர் எடுத்த அதிகபட்ச டி20 ஸ்கோரை லஹிரு உதார பதிவு செய்தார்.
இதன் மூலம், 2013-ல் துபாயில் குசல் பெரேரா எடுத்திருந்த 84 ஓட்டங்களை அவர் முறியடித்தார்.
மோசமான தொடக்கத்திற்குப் பின்னர், அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஒரு ஓட்டத்துக்கும், கமில் மிஸ்ஹாரா ஆறு ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், உதார, கமிந்து மெண்டிஸுடன் (23) மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் சேர்த்து, 18-2 என்ற நிலையில் இருந்து அணியை மீட்க உதவினார்.
தசுன் ஷனகா சிறிது நேரம் ஆதரவளித்தார்.
அவரும் உதாராவும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இறுதி ஆறு ஓவர்களில் இலங்கை அணி 66 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3-36 என்ற கணக்கில் 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் மொஹமட் இம்ரான் 2-21 என்ற கணக்கில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மீதமுள்ள இரண்டு போட்டிகளும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ராவல்பிண்டியில் நடைபெறுகின்றன.













