‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் இன்று (14) ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு டெல்லியின் திகார் சிறையில் அடைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அமைதி ஒப்பந்த விதிகளை மீறியது மற்றும் போராட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தஸ்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
சிறப்பு நிர்வாக நடுவர் மகேஷ் குமார் மீனா தனது உத்தரவில், சம்பந்தப்பட்ட தலைவர்களின் கடந்தகால நடவடிக்கைகள், அவர்கள் அதிகாரிகளின் சட்டப்பூர்வமான உத்தரவுகளை மீறியுள்ளதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஓராண்டு காலத்திற்கு அமைதியையும் நன்னடத்தையையும் கடைப்பிடிப்பதற்கான பிணைப் பத்திரங்களை அவர்கள் அளித்திருந்த போதிலும், விடுதலையான பிறகு சமூக ஊடகங்கள் வாயிலாகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், சனிக்கிழமையன்று (10) ஜந்தர் மந்தரில் மக்களைத் திரட்ட முயன்றும் அந்தப் பிணை நிபந்தனைகளை அவர்கள் மீறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 130-ன் கீழ் இரு தலைவர்களுக்கும் அழைப்பாணை அனுப்பவும், அவர்களை ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
அமைதியையும் நன்னடத்தையையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட மற்றொரு CJP தலைவரான அஜிங்க்யா ஷிண்டே, தனிப்பட்ட பிணை மற்றும் ரூ. 5,000 மதிப்பிலான பிணை உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.















