ஹட்டன் எம்.ஆர். டவுன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றிலிருந்து வீதியில் குப்பைப் பை வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று (27) இரவு சுமார் 9 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், காரில் பயணித்த சிலர் வீதியோரத்தில் நின்றிருந்த நாய்கள் கூட்டத்தை நோக்கிக் குப்பைப் பையொன்றை வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இச்சம்பவத்தை முழுமையாக காணொளியாகப் பதிவு செய்துள்ளார். வீசப்பட்ட குப்பைப் பை வீதியோரத்தில் இருந்த நாய்கள் மீதும் படும் வகையில் சென்றமை காணொளிக் காட்சிகளில் தென்படுவதாகக் கூறப்படுகிறது.
ஹட்டன் நகரில் ஏற்கனவே காணப்படும் குப்பை முகாமைத்துவ சவால்களுக்கு மத்தியில், இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் நகரின் தூய்மை, சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, குறித்த காணொளிக் காட்சிகள் மற்றும் ஏனைய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு காரையும் அதில் பயணித்தவர்களையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பவம் தொடர்பில் சுற்றுச்சூழல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் குப்பை முகாமைத்துவப் பிரிவும், இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்களைப் பரிசீலித்து, தமது அதிகார வரம்பிற்குட்பட்ட சட்டங்கள் மற்றும் நடைமுறையிலுள்ள உபவிதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொது வீதிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவது தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால், சம்பவத்தின் தன்மை மற்றும் உரிய சட்ட அதிகாரங்களை உறுதிப்படுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நகரின் தூய்மையைப் பாதுகாப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அதிகாரிகளின் தலையீடும் பொதுமக்களின் பொறுப்புணர்வும் அவசியம் என பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.














