இலங்கையின் வரலாற்றில் துடைத்தெறிய முடியாத இரத்தக் கறையாகப் பதிந்துபோன 1983ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை இன வன்முறைகள் இடம்பெற்று நாற்பத்தேழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் இன்றளவும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்தேறிய இன அழிப்புகளைத் தென்னிலங்கைப் பேரினவாதத் தரப்பு சாக்குப்போக்குகளால் மூடி மறைக்க முயன்றாலும், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளும் பொருளாதாரப் புறக்கணிப்புகளும் மாறவேயில்லை.
இந்நிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் ஒன்று நடைபெற்றது. 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறியவும், மனித மற்றும் பொருளாதாரச் சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனிநபர் பிரேரணை ஒன்றைச் சபையில் சமர்ப்பித்திருந்தார்.
இப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், தென்னிலங்கைத் தலைவர்களின் போலி முகங்களை வெளிப்படுத்தினார். கடந்த 2001இல் சந்திரிக்கா அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுவின் அறிக்கையோ அல்லது 2004இல் வழங்கப்பட்ட உதட்டளவு மன்னிப்போ குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பட்டலந்த சித்திரவதை முகாம் போல, கறுப்பு ஜூலை தொடர்பிலும் ஆழமான விசாரணை வேண்டும் எனக் கோரிய அவர், கறுப்பு ஜூலைக்கான வரலாற்றுப் பொறுப்பை ஒட்டுமொத்தச் சிங்கள மக்கள் மீதும் தமிழர்கள் சுமத்தவில்லை என்பதையும், அன்றைக்குத் தமிழர்களைப் பாதுகாத்த மனிதநேயச் சிங்களவர்களும் இருந்தார்கள் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
அதேவேளை, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கே சபையில் அதிக நேரம் ஒதுக்கப்படுவதாக ரவி கருணாநாயக்க எழுப்பிய வாதத்திற்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த சாணக்கியன், தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் என்பதை நினைவூட்டினார்.
இதனிடையே, விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இனரீதியான பிரிவினைகளைக் கடந்து, “ஒட்டுமொத்த இலங்கையர்கள்” என்ற அடையாளத்துடன் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார். 13ஆவது திருத்தத்தின் ஊடாகக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிப்பதே தங்களது பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
மறுபுறம், தயாசிறி ஜெயசேகர பேசுகையில், 1983 கலவரமே 30 ஆண்டுகால யுத்தத்திற்கும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கும் பிரதான காரணம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, ஒரு சிங்களவராகத் தான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், 1948ஆம் ஆண்டு குடியுரிமைப் பறிப்பு, 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம், பண்டா – செல்வா ஒப்பந்த முறிவு, 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம், 1981ஆம் ஆண்டு யாழ். நூலக எரிப்பு என இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றுத் தவறுகளை வரிசையாகப் பட்டியலிட்டு ஏற்றுக்கொண்டார். ஆனால், விவாதத்தின் இறுதியில் புதிய ஆணைக்குழுவை நிராகரித்த அவர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதே உசிதமானது எனக் கூறி, வழக்கமான காலம் இழுத்தடிக்கும் போக்கையே மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தென்னிலங்கைத் தலைவர்கள் வெளியிட்ட இந்த உரைகள், அவர்களின் இருதய சுத்தியற்ற போலி முகமூடிகளையே மீண்டும் கழன்று விழச் செய்துள்ளன. தெரிவுக்குழு, ஆணைக்குழு என்ற காலாவதியான பல்லவிகளால் “ஐக்கிய இலங்கை” என்ற கோட்பாடு முற்றிலும் தோற்றுப்போயுள்ளது.
உண்மையான நல்லிணக்கம் மலர வேண்டுமானால், சிங்களப் பேரினவாதத் தலைமைகளின் சிந்தனை முறையில் அடிப்படையான கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்பட வேண்டும். தமிழர்களின் அரசியல் மற்றும் நில இருப்பை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துவதும், சுயாட்சிக்கான உண்மையான அதிகாரப் பகிர்வை வழங்குவதும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதுமே இந்தத் துயரங்களுக்குரிய ஒரே நிரந்தரத் தீர்வாகும்.















