கைத்தொழில் துறையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பப் போக்குகளுக்குப் பொருந்தும் வகையில், பொறியியல் கல்வி தொடர்பான முறையான கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பொறியியல் கல்விக்கான தேசியக் கொள்கையைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் முதன்முறையாகக் கூடியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் தேசியத் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய தரமானதும் வினைத்திறன் மிக்கதுமான பொறியியல் கல்வி முறையொன்றை உருவாக்கும் நோக்கில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அவர்களால் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின்போது, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் தற்போதைய நிலைமை, அத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திசைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பொறியியல் கல்விக்கான தேசியக் கொள்கையைத் தயாரிப்பதன் மூலம் தற்போதுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கும், இத்துறையின் எதிர்கால அபிவிருத்திக்குத் தேவையான கொள்கை ரீதியான மற்றும் மூலோபாய நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பொறியியல் கல்வித் துறையானது பொறியியலாளர்களை உருவாக்குவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரிவுகளை உள்ளடக்கிய விரிவான துறையாகும் என்றும் வலியுறுத்தினார். இந்த அனைத்துத் தொழில்சார் தேவைகளையும் உள்ளடக்கும் வகையில் நாட்டின் மூன்றாம் நிலைக் கல்வி முறையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பப் போக்குகளைக் கருத்திற்கொண்டு, தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறை தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இதற்காக, கைத்தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பாடநெறிகளைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். அத்துடன், பொறியியல் கல்வியைத் திட்டமிடும்போது நாட்டின் தேசியப் பொருளாதாரத்திற்கும் உள்நாட்டுக் கைத்தொழில்களின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தொழிற்கல்விப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுவதால், மூன்றாம் நிலைக் கல்வி முறையும் அதற்குப் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அதற்கமைய மாணவர்கள் கல்வியில் பிரவேசிப்பதற்கும், தேவையான சந்தர்ப்பங்களில் வேறு கல்விப் பாதைகளுக்குத் திசைமாறிச் செல்வதற்கும் இயலுமான நெகிழ்வான நடைமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். மாணவர்கள், கைத்தொழில் துறை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொண்ட பின்னர், அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் பொறியியல் கல்விக்கான தேசியக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில், நிபுணர் குழுவின் தலைவரும் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் கே. வீ. எம். உதயங்க ஹேமபால உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.













