பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
அனைத்து அரச பல்கலைக்கழக அமைப்புகளுக்குள்ளும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.
அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதுமான பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு இணையாக நாளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் பேரணி ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க மேலும் தெரிவித்தார்.














