திங்கட்கிழமை (நவம்பர் 2) அதிகாலை வேளையில், மேற்கு-மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ‘முரசு’ (Murasu) சூறாவளி, தீவிர சூறாவளியாக வலுவடைந்தது.
இந்த வளிமண்டல அமைப்பு தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில் ஓங்கோல் அருகே ஒரு தீவிர சூறாவளி புயலாகக் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. ஆகவும், அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அது எச்சரித்தது.
ஞாயிற்றுக்கிழமை (01) வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘முரசு’ என்று பெயரிடப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளியாக வலுவடைந்தது.
இந்தச் சூறாவளி, நவம்பர் 3 ஆம் திகதி காலை ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (02) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் இன்று ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு முழுமையாகத் தயாராக இருக்குமாறு ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
அதேவேளையில், அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசாவும் தனது தெற்குப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தச் சூறாவளிக்கு இந்தியா ‘முரசு’ (Murasu) என்று பெயரிட்டுள்ளது; இதற்கு ‘போர் முரசு’ என்று பொருள். ஒடிசாவிற்கு அருகிலுள்ள ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைத் தாக்கிய முந்தைய சூறாவளியின் பெயர் ‘அர்னாப்’ (Arnab) ஆகும். அக்டோபர் 28 அன்று அது கரையை அடைந்தபோது, அதன் காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ வரை இருந்தது.















