அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மருத்துவர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளக் குறைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க, இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், சங்கத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாகவும், போராட்டத்தினால் வைத்தியசாலை சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு சுகாதார ஊழியர் சங்கமும் அறிவித்துள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.













