பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் அவரது கைக்குழந்தையின் எதிர்கால நலனைப் பாதுகாப்பதற்காக, அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நக்கிள்ஸ் பிரதேசத்தில், பாதுகாப்பற்ற பிரசவத்தைத் தொடர்ந்து பிறந்த பச்சிளம் குழந்தையுடன் 15 வயதுடைய மகள் ஒருவர் மீட்கப்பட்டதாகப் பதிவாகியுள்ள சம்பவம், ஒரு தாயாகவும் ஒரு மனிதப் பிறவியாகவும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கின்றது.
எவ்வாறாயினும், இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுமியினதும் பிறந்த பச்சிளம் குழந்தையினதும் உயிர்கள் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளன என்பது சற்று ஆறுதலளிக்கும் விடயமாகும்.
இவ்விரு பிள்ளைகளினதும் உடல் மற்றும் உள நலனைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து அரசாங்கத் தலையீடுகளையும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை நாம் ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் கருதவில்லை. இன்று சமூகத்தில் நிலவும் பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் ஏனைய சிக்கல்கள் எமது பிள்ளைகளைப் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றமை தெளிவாகத் தெரிகின்றது.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர உறவும், வெளிப்படையான கலந்துரையாடலும் படிப்படியாகப் பலவீனமடைந்து வருகின்றமை இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதையும் நாம் அவதானித்துள்ளோம்.
இதன் விளைவாக, பிள்ளைகள் தாம் மிகவும் பாதுகாப்பாக உணர வேண்டிய சூழல்களுக்குள்ளேயே, குறிப்பாகத் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமிருந்தே பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகின்றது.
எத்தகைய சூழ்நிலைகள் நிலவினாலும், பெற்றோராகிய நாம் அனைவரும் “நான் எனது பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையையும் துணிச்சலையும் எமது பிள்ளைகளின் மனங்களில் விதைக்க முயற்சிக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்குவதும், வீட்டிற்குள் வெளிப்படையான கலந்துரையாடலை ஊக்குவிப்பதும் இத்தகைய ஆபத்தான மற்றும் மனவேதனை அளிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் பெருமளவில் துணைபுரியும் என நான் திடமாக நம்புகிறேன்.
மேலும், பாதிப்புக்குள்ளான அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணியாற்றும் அனைத்துத் தரப்பினரும் அரச நிறுவனங்களும், பொதுமக்களால் இன்னும் இலகுவாக அணுகக்கூடியதாகவும், நெருங்கிப் பழகக்கூடியதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் மாற வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.
நீண்டகாலமாகப் பிள்ளைகளை ஆபத்தில் ஆழ்த்தும் இத்தகைய சமூகப் பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் சிக்கும் பிள்ளைகளுக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான தீர்வாக 2027 ஆம் ஆண்டு முதல் புதிய “மாற்றுப் பராமரிப்புக் கொள்கை” (Alternative Care Policy) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு, வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது உட்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது முன்னெடுத்து வருகின்றது.
சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் முழுச் சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்பதால், எமது நாட்டின் பிள்ளைகளின் நல்வாழ்வு குறித்து அதிக உணர்திறனுடனும், விழிப்புணர்வுடனும், அக்கறையுடனும் செயற்படுமாறு அனைத்துப் பிரஜைகளையும் நான் கேட்டுக்கொள்கின்றேன் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவர், இரண்டு மாதக் குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள ஆள்நடமாட்டமற்ற குகையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
உடுதும்பர பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து குறித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி காணாமல் போனமை தொடர்பில் அவரது குடும்பத்தினர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது, இளைஞர் ஒருவர் அப்பகுதியிலுள்ள கடையொன்றில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு அரிசி மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், குறித்த இளைஞரைப் பின்தொடர்ந்து சென்றபோது, மக்கள் குடியிருப்புகளிலிருந்து தொலைவிலுள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்ட குகையொன்றைக் கண்டறிந்துள்ளனர்.
அந்தக் குகைக்குள் மேற்கொண்ட சோதனையின்போது, காணாமல் போயிருந்த 15 வயது சிறுமியும் அவரது இரண்டு மாதக் குழந்தையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி, குறித்த சிறுமி எவ்வித மருத்துவ உதவியுமின்றி அந்தக் குகைக்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு கித்துல் தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாய்க்கும் குழந்தைக்கும் வனப்பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மூலிகைகளைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு கித்துல் பாணி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரமொன்று உபயோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட சிறுமியும் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












