புக்கெட்டின் படோங்கில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் வாடகை மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் திங்கட்கிழமை (16) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலான உயிரிழப்புகள் புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காயமடைந்த 36 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காத்து (Kathu) மாவட்டத்தில் உள்ள படோங்கில், பாங் முவாங் சாய் கோ சாலையில் அமைந்திருந்த வணிக வளாகம் ஒன்றில் உள்ளூர் நேரப்படி திங்கள் அதிகாலை 3.15 மணிக்கும் 3.20 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென அந்த கட்டிடம் முழுவதும் பரவியதுடன், அதன் இருபுறமும் இருந்த அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, ஐந்து வணிக அலகுகளும், அந்த வணிக இடங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்களும் தீ விபத்தில் சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
தீ விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.















