2,808 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராப்பிட்டிய மருத்துவ பீடத்திற்குச் சொந்தமான புதிய பத்து மாடிகளைக் கொண்ட பேராசிரியர் சிகிச்சை விடுதிக் கட்டடத் தொகுதியை (Professorial Ward Complex) நேற்று (15) பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
300 படுக்கைகளைக் கொண்ட இந்தச் சிகிச்சை விடுதிக் கட்டடத் தொகுதியில், மருத்துவம், சத்திரசிகிச்சை, மனநல மருத்துவம் மற்றும் மகப்பேறியல் விடுதிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 08 படுக்கைகளைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, 03 நவீன சத்திரசிகிச்சைக் கூடங்கள், 08 வெளிநோயாளர் சிகிச்சை அறைகள் மற்றும் மருத்துவப் பரீட்சை மண்டபம் ஆகியவையும் இதில் உள்ளடங்குகின்றன.
இதன் மூலம் காலி தேசிய வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்புச் சேவைகளின் திறனை மேம்படுத்தவும், மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கான வசதிகளையும் விரிவுபடுத்தவும் முடியும். இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்கம், நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் பங்களிப்புச் செய்துள்ளன.


இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர்,
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 740 பில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறைக்கு 710 பில்லியன் ரூபாவும் என வரலாற்றில் அதிகூடிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், காலி தேசிய வைத்தியசாலையில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 8,500 மில்லியன் ரூபா செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், சபரகமுவ, பதுளை மற்றும் களுத்துறை மருத்துவ பீடங்களிலும் புதிய பேராசிரியர் சிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், MRI மற்றும் LINAC இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 21.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வைத்தியசாலைக் கட்டட நிர்மாணப் பணிகளை 2028ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது – என்றார்.
இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி அக்குரட்டியே நந்த தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர்,சுகாதாரப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிறிபால மானவடு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் G.M.R.D. அபொன்சு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் (மருத்துவ சேவைகள்) டபிள்யூ.கே. விக்கிரமசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் சிரேஷ்ட பேராசிரியர் K. L. வசந்த குமார, ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் P.A. ஜயந்த, காலி தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் P. L. அத்தபத்து, ஜேர்மன்–இலங்கை நட்புறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் K.M. தர்மரத்ன, ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் விஜித டி சில்வா உட்பட பீடாதிபதிகள், உபவேந்தர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள் மற்றும் சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.












