இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2016 மார்ச் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, குரகல விகாரை தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது.
அவரது கருத்துக்கள் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, தண்டனைச் சட்டக்கோவையின் 291ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம், கடந்த 2024ஆம் ஆண்டு ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்டு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
இதனை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியிருந்தார்.
எனினும், குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டமை உள்ளிட்ட வேறு சில சட்ட நடவடிக்கைகளையும் ஞானசார தேரர் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














