அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், ராஜாங்கனை சத்தாரதன தேரர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (18) காலை ராஜாங்கனை சத்தாரதன தேரர் மற்றும் மற்றுமொரு நபரிடம் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையானது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யத் தவறியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஏழு சந்தேகநபர்களின் பிணை மனுவை நிராகரித்த அநுராதபுரம் பிரதம நீதிவான் சியாபத் சசிந்து விக்கிரமரத்ன, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்யத் தவறியமை குறித்து விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும், குறித்த பொலிஸ் அதிகாரி எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.















