டிலுக்ஷா
பிரித்தானியாவின் சஃபோக் (Suffolk) பகுதியிலுள்ள பார்ன்ஹம் (Barnham) கிராம மக்கள், தமது கிராமத்தை பிரித்தானியாவிலிருந்து பிரிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அருகிலுள்ள முன்னாள் விமானப்படைத் தளத்தில் 930 புகலிடக் கோரிக்கையாளர்களைத் தங்க வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில், சுமார் 500 வாக்காளர்களில் 257 பேர் பிரிவதற்கு ஆதரவாகவும், 16 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். எனினும் இவ்வாக்கெடுப்பு சட்டரீதியான அதிகாரத்தைக் கொண்டிராதது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேநேரம் ஜெர்சி (Jersey), குவேர்ன்சி (Guernsey) போன்ற பகுதிகளைப் போன்று, பிரித்தானிய மன்னருக்கு விசுவாசத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் அதேவேளை, உள்துறை அமைச்சின் நிர்வாக அதிகார வரம்பிலிருந்து விலகும் வகையிலான அந்தஸ்தைப் பெறுவதே கிராம மக்களின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் ஏற்கனவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற வாக்கெடுப்பு கடந்த செப்டெம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்ஷயர் (Oxfordshire) பகுதியிலுள்ள பிடிங்டன் (Piddington) கிராமத்திலும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














