பால்டிக் கடல் பகுதியில் சனிக்கிழமை (22) அன்று இராணுவத்துடன் தொடர்புடைய ரஷ்ய சரக்குக் கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகித் தீப்பிடித்தது.
இது உக்ரேன் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று பின்லாந்து தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கப்பல் மிதந்து சென்று பின்லாந்தின் கடல் எல்லைக்குள் நுழைந்தாக தெரிவிக்கப்படுகிறது.
‘ஸ்பார்டா II’ (Sparta II) கப்பலின் 16 பேர் கொண்ட குழுவினர் உயிர் காக்கும் படகுகள் மூலம் வெளியேறி, அருகில் இருந்த ரஷ்யக் கப்பல் ஒன்றிற்குச் சென்றனர்; அவர்கள் தற்போது ரஷ்யாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று பின்லாந்து எல்லைக் காவல் படைத் தளபதி இல்யா இல்ஜின் (Ilja Iljin), சனிக்கிழமை இரவு பொது ஒளிபரப்பு நிறுவனமான ‘YLE’-இடம் தெரிவித்தார்.
ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியை நோக்கிச் சென்ற அந்த கப்பல், ரஷ்யாவின் கோக்லாண்ட் தீவுக்கு மேற்கே சர்வதேச கடல் பகுதியில் சேதமடைந்ததாக பின்லாந்து பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
இது, ரஷ்ய அதிகாரிகள் முன்னதாக அளித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சனிக்கிழமை இரவு வரை தீ எரிந்துகொண்டிருந்தது.
கப்பல் பின்லாந்து கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளை பின்லாந்து முன்னின்று நடத்தி வருகிறது.
இருப்பினும், பழுதடைந்த கப்பலை ரஷ்யக் கப்பல்கள் பின்னர் தங்கள் நாட்டுக்கு இழுத்துச் செல்லக்கூடும் என்று பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியின் போது, ரஷ்ய ஹெலிகொப்டர் ஒன்று பின்லாந்து வான்வெளியை சிறிது நேரம் மீறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக, பின்லாந்து வளைகுடா கடற்கரை காவல்படையின் தளபதி மிக்கோ சிமோலா தெரிவித்தார்.
இந்த ஆண்டு உக்ரேன் ரஷ்யாவின் வடமேற்கு லெனின்கிராட் பகுதியை நோக்கி பலமுறை இராணுவ ட்ரோன்களை அனுப்பியுள்ளது.
இதில் சில ட்ரோன்கள் பால்டிக் பிராந்தியத்தின் வான்வெளிக்குள் நுழைந்ததால், இந்த போர் நேட்டோ (NATO) நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் பாதிக்கக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.











