கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தின் உண்மை நிலவரம் தொடர்பான தெளிவான விளக்கத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பெரிய அளவிலான மீன்கள், நன்னீர் இறால்கள் மற்றும் மீன் குஞ்சுகள் உள்ளிட்ட பெருமளவிலான நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து நீரில் மிதந்துள்ளன.
குளத்தின் நீர் வெளியேற்றப்பட்ட விதம் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளின்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இவ்விடயம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, இச்சம்பவத்தினால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மேற்கொண்ட உழைப்பின் பலனாக வளர்க்கப்பட்ட மீன்களையும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் இழந்துள்ள மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய, பாதிக்கப்பட்ட மீனவர்களின் இழப்புகள், வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் சம்பவத்திற்கான காரணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் மூலம் விரிவான தகவல்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வட மாகாண ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மீன்கள் பெருமளவில் உயிரிழந்துள்ளதால் குளத்து நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, இச்சம்பவத்திற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.















