ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் முக்கிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அந்நாட்டின் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள அவர், கடந்த பத்தாண்டுகளை விட அடுத்த பத்தாண்டுகள் பிரிட்டனுக்கு மிகவும் சிறப்பானதாக அமைய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் எனக் குறிப்பிடவுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டனின் பொருளாதாரத்தில் 17 பில்லியன் பவுண்டுகள் வரை கூடுதல் வளர்ச்சி ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2028ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில விதிமுறைகளைப் பிரிட்டன் பின்பற்றுவதற்கு இணங்க, பிரிட்டனின் உணவு ஏற்றுமதிகள் மீதான பெரும்பாலான சோதனைகள் நீக்கப்படவுள்ளன.
மேலும், 2030 ஜனவரிக்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய இளைஞர் அனுபவத் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 18 முதல் 31 வயதுக்குட்பட்ட 100,000 பேர் வரை மூன்று ஆண்டுகள் வரையில் பிரிட்டனில் பயணம் செய்யவும், வேலை செய்யவும், கல்வி கற்கவும் அனுமதிக்கப்படவுள்ளனர். இதே எண்ணிக்கையிலான பிரித்தானிய இளைஞர்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளைப் பிரிட்டன் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படுவது நியாயமற்றது என கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவு பிரிட்டிஷ் வர்த்தக நிறுவனங்களின் போட்டித்தன்மையைப் பாதிக்கும் என ரிஃபார்ம் யுகே கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ் விமர்சித்துள்ளார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் எதிர்வரும் மாதங்களில் முறைசாரா ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.















