இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து சோமாலியா வரை சுமார் 5,700 கிலோ மீற்றர் தூரத்தை 101 மணித்தியாலங்களில், எவ்வித இடைநிறுத்தமுமின்றி பறந்து பெண் அமூர் வல்லூறு ஒன்று சாதனைப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
‘அலாங்’ (Alang) எனப் பெயரிடப்பட்ட குறித்த பறவை, நான்கு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பறந்து இந்த நீண்ட தூரத்தைக் கடந்துள்ளது.
வெறும் 150 கிராம் எடையைக் கொண்ட இந்தப் பறவை, தனது பயணத்தின்போது பரந்த கடற்பரப்புகளையும் கடந்து சென்றுள்ளது.
இதேவேளை, ‘அபபாங்’ (Apapang) எனப் பெயரிடப்பட்ட மற்றொரு ஆண் அமூர் வல்லூறு, 95 மணித்தியாலங்களில் சுமார் 4,100 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், நவம்பர் 21 ஆம் திகதி கிடைத்த இறுதிச் செயற்கைக்கோள் சமிக்ஞையின்போது அது அரேபியக் கடலுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பறவைகளுக்கும் இந்திய வனவிலங்கு நிறுவகத்தின் (Wildlife Institute of India) ஆய்வாளர்களால் எடை குறைந்த செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
மணிப்பூர் மாநிலத்தின் தமெங்லொங் மாவட்டத்திலிருந்து இவற்றின் நீண்ட தூரப் பயணம் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கு முன்னர், குறித்த பகுதியில் 25 நாட்கள் தங்கியிருந்த இந்தப் பறவைகள், தமது நீண்ட தூரப் பயணத்திற்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்வதற்காக கரையான்களை அதிகளவில் உட்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில், அமூர் வல்லூறுகளின் இந்த நீண்ட தூர இடம்பெயர்வுப் பயணம் பறவைகளின் வியக்கத்தக்க பறக்கும் திறனையும், அவற்றின் புலம்பெயர்வு ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நீண்ட தூரம் இடம்பெயரும் அமூர் வல்லூறுகள்
அமூர் வல்லூறுகள் (Amur Falcons) ஆண்டுதோறும் கிழக்கு ரஷ்யா, மங்கோலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் குளிர்கால வாழிடங்களை நோக்கி நீண்ட தூர இடம்பெயர்வுப் பயணத்தை மேற்கொள்கின்றன.
இந்தப் பயணத்தின்போது, வடகிழக்கு இந்தியா முக்கியமான இடைநிறுத்தப் பகுதியாக விளங்குகின்றது.
குறிப்பாக, இலையுதிர் காலத்தில் இப்பகுதியில் அதிகளவில் காணப்படும் பூச்சிகளை உணவாக உட்கொண்டு, கடற்பரப்புகளைக் கடந்து செல்வதற்குத் தேவையான சக்தியை இப்பறவைகள் பெற்றுக்கொள்கின்றன.
அமூர் வல்லூறுகளின் இடம்பெயர்வுப் பாதை மற்றும் அவற்றின் பறக்கும் திறனைத் தீர்மானிப்பதில் காற்றின் வேகமும் திசையும் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வொன்றிலும், வளிமண்டலக் காற்றோட்டங்கள் இப்பறவைகளின் இடம்பெயர்வு நகர்வுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இப்பறவைகள் நீண்ட தூரப் பயணத்தின்போது தமது பாதையை எவ்வாறு தீர்மானிக்கின்றன மற்றும் இடைநிறுத்தத்திற்கான இடங்களை எவ்வாறு தெரிவு செய்கின்றன என்பது தொடர்பில் இன்னும் பல விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்புகளின்படி, குறித்த இரண்டு அமூர் வல்லூறுகளும் தமது இடம்பெயர்வுப் பயணத்தின் போது 23 நாடுகளைக் கடந்து, மொத்தமாக 20,000 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ளன.
அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதம் அவை மீண்டும் மணிப்பூர் பகுதிக்குத் திரும்பியுள்ளமையும் கண்காணிப்புத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, வடகிழக்கு இந்தியாவில் அமூர் வல்லூறுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
கடந்த காலங்களில் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் இப்பறவைகள் வேட்டையாடப்பட்டு வந்த நிலையில், தற்போது உள்ளூர் சமூகங்கள், ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் அவற்றின் வேட்டையாடல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாரம்பரியமாக அவை தங்கும் இடங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சமூகம்சார் பாதுகாப்பு முயற்சிகள், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் அமூர் வல்லூறுகளின் வாழ்விடங்களையும் அவற்றின் இடம்பெயர்வுப் பாதைகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

















