மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ராஜாங்கனை சத்தரதன தேரரைக் கைது செய்ய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், அவருக்கு பிணை வழங்கிய பிணையாளர்களுக்கு அறிவித்தல் அனுப்புமாறும் கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மேலும், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த வழக்கை 2027 பெப்ரவரி 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்த மதகுருமார் ஒழுங்கிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனை சத்தரதன தேரர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பான மற்றுமொரு வழக்கில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.














