தமிழ்நாடு அரசு புதன்கிழமையன்று பல்வேறு துறைகளில் சுமார் 50,000 கோடி இந்திய ரூபாவுக்கும் (5.38 பில்லியன் அமெரிக்க டொலர்) அதிகம் மதிப்பிலான 70 முதலீட்டு ஒப்பந்தங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக, இந்த அறிவிப்பு குறித்து நேரடியாக அறிந்த இருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை (24) செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்க்கவும், முதலீட்டு உறுதிமொழிகளைச் செயல்பாட்டுத் திட்டங்களாகவும் மூலதனச் செலவினங்களாகவும் மாற்றவும் அந்தத் தென்னிந்திய மாநிலம் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்த முதலீட்டு முன்மொழிவுகள் வந்துள்ளன.
இதற்காக தமிழ்நாடு, புதன்கிழமையன்று (25) சென்னையில் முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ள முதலீட்டாளர்களில் பிரேசிலிய வாகன உற்பத்தியாளரான WEG-ம் ஒன்றாகும் என ரொய்ட்டர்ஸ் செய்தியில் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டாளர் கூட்டம், முந்தைய ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் முயலும்.
முன்னாள் நடிகர் ஜோசப் விஜய் முதலமைச்சரான பின்னர் நடைபெற்ற முதல் முதலீட்டாளர் கூட்டத்தில், தமிழகம் ஆகஸ்ட் மாதம் ரூ.67,452 கோடி மதிப்பிலான சுமார் 100 முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தங்களில், பிரான்சின் செயிண்ட்-கோபேன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வர் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் ஆகியவற்றின் முதலீடுகளும் அடங்கும்.
மாநிலத் தொழில்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின்படி, புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், உற்பத்தி, தொழில்துறை உள்கட்டமைப்பு, தூய எரிசக்தி, பொறியியல், ஜவுளி மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் திட்டங்களைத் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்தவும், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தொழில்நுட்ப மையங்களை நிறுவவும் விரும்பும் உலகளாவிய பெருநிறுவனங்களைக் கவர இந்திய மாநிலங்கள் போட்டியிடும் வேளையில், இந்த முதலீட்டு உந்துதல் வந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடமிருந்து 4.59 பில்லியன் டொலர் மதிப்பிலான நிலக்கரியை எரிவாயுவாக மாற்றும் திட்டம் மற்றும் கியா இந்தியாவிடமிருந்து 2 பில்லியன் டொலர் மதிப்பிலான இரண்டாவது உற்பத்தி ஆலை உள்ளிட்ட பல முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.













