2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்ட சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீள வழங்குமாறு கோரி, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (25) மீண்டும் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனை பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.
இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாகப் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்கலைக்கழக சமூகத்தின் உரிமைகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலைமை பல்கலைக்கழகத் துறையில் மேலும் பல சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பல்கலைக்கழக சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து துரித தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஒன்பது பிரதான தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாகவும் தம்மிக்க எஸ். பிரியந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.














