முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான இஸ்ரேலின் ‘யாஷார்’ (Yashar) கட்சி, கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வலதுசாரி எதிர்க்கட்சி ஒன்றுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முன்னதாக, ‘இஸ்ரேல் அவர் ஹோம்’ (Israel Our Home) கட்சியின் தலைவரான அவிக்தோர் லிபர்மேனை ஐசென்கோட் சந்தித்தார் என்றும், அதன் பின்னர் அவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய இத்தகைய முதல் கூட்டணி இதுவாகும்.
கடந்த ஒக்டோபர் 27 அன்று நடந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பெரும்பான்மையை இழந்ததோடு, மற்றவர்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கான தெளிவான வழியும் இல்லாத நிலையில், புதிய அரசாங்கம் அமையாமலேயே இஸ்ரேலின் நாடாளுமன்றம் நவம்பர் 10 அன்று பதவியேற்றது.
ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஐசன்கோட்டிடம் ஒப்படைத்துள்ளார், அதே நேரத்தில் நெதன்யாகு தற்காலிகப் பிரதமராகத் தொடர்கிறார்.
நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி, தீவிர வலதுசாரி மற்றும் அதி-பழமைவாதக் கட்சிகளுடன் அமைத்த கூட்டணி, தேர்தல் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாகச் செயல்பட்டபோதிலும், தனது பெரும்பான்மையை இழந்தது.
தற்போது அக்கட்சி நாடாளுமன்றமான நெசெட்டின் 120 இடங்களில் 53 இடங்களை மட்டுமே கொண்டுள்ளது.
ஐசென்கோட்டின் மத்திய-வலதுசாரி ‘யாஷார்’ (Yashar) கட்சியும், லிபர்மேன் உள்ளிட்ட அதன் பல்வேறு கூட்டணி பங்காளிகளும் மொத்தம் 48 இடங்களை மட்டுமே கொண்டுள்ளனர்.
இருப்பினும், இஸ்ரேலின் அரபு சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இவர்களுக்குச் சாத்தியமான பங்காளிகளாக உள்ளன.
19 இடங்களைக் கொண்ட இந்தக் கட்சிகள், நெதன்யாகுவை மிகக் கடுமையாக எதிர்ப்பதில் ஐசென்கோட்டுடன் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் 21 இடங்களைப் பெற்ற ஐசென்கோட்டின் கட்சிக்கும், 7 இடங்களைப் பெற்ற லிபர்மேனின் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கை ஒருவித ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கும், நெதன்யாகுவுடன் இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கும் தான் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக லிபர்மேன் ஏற்கனவே வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
நெதன்யாகுவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதே தனது முதன்மை நோக்கம் என்றும் லிபர்மேன் தெரிவித்திருந்தார்.
ஐசென்கோட் தனக்கு வழங்கப்பட்ட 28 நாள் கால அவகாசத்திற்குள், அதாவது டிசம்பர் 6-ஆம் திகதிக்குள் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் அவர் மேலும் 14 நாட்கள் கால நீட்டிப்பைக் கோரலாம்.
அவர் அரசாங்கத்தை அமைக்கத் தவறினால், நெதன்யாகுவுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
யாராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.













